யார் நண்பன் ?
இடம்: ஏதோ ஒரு யுத்தகளம்
காலம்: முதல் உலகப்போர்
தனக்கு முன்னால் சென்ற தனது பல ஆண்டு கால நண்பன், யுத்தகளத்தில் வீழ்ந்ததைக் கண்ட அந்த சிப்பாய், நண்பனை மீட்டு எடுத்து வர தனது படை கேப்டனிடம் அனுமதி கோரினான். "நீ செல்லலாம், ஆனால் அதனால் பயன் ஒன்றும் இருப்பதாகத் தோன்றவில்லை. உன் நண்பன் இறந்திருக்கலாம்! நீ அனாவசியமாக உன் உயிருக்கு பேராபத்தை உண்டாக்கிக் கொள்கிறாய்" என்றுரைத்த கேப்டனின் சொற்களை மதிக்காமல், நெஞ்சுறுதி மிக்க அச்சிப்பாய் தன் உயிர் நண்பனை மீட்கச் சென்றான்.
யுத்தகளத்தில் அங்குமிங்கும் பாய்ந்த குண்டுகளை சமாளித்து, மிகுந்த போராட்டத்தின் முடிவில் தன் நண்பனை அடைந்த சிப்பாய், அவனை தோளிலிட்டு தனது படை பதுங்கி இருந்த பாதுகாப்பான பகுதிக்கு, மிகுந்த சிரமப்பட்டு தூக்கி வந்து விட்டான். பல இடங்களில் குண்டடிபட்டு ரத்தம் சிந்திக் கொண்டிருந்த சிப்பாயை கேப்டன் கனிவாகப் பார்த்து, "நான் பயனில்லை என்றுகூறினேன் அல்லவா? உன் நண்பன் உடலில் உயிர் இல்லை, நீ இருக்கும் நிலையில் நீ உயிர் பிழைப்பதே கடினம் எனத் தோன்றுகிறது!" என்றார்.
சிப்பாய், 'நீங்கள் கூறுவது தவறு, என் நண்பனை நான் மீட்கச் சென்றதை மிகச் சரியான செயலாகத் தான் கருதுகிறேன்' என்றவுடன் கேப்டன் சற்று அதிர்ச்சியுடன், "சிப்பாய்! நீ உன் நண்பனின் இறந்த உடலை மீட்டு வந்ததில் ஒரு பயனும் இல்லை அல்லவா?" என்றபோது, அச்சிப்பாய் கூறினான், "ஆனால், நான் சென்றடைந்தபோது என் நண்பன் உயிருடன் தான் இருந்தான்! என்னைக் கண்டவுடன், உயிர் பிரிவதற்கு முன் அவன் சொன்ன 'நீ நிச்சயம் வருவாய் என்று எனக்குத் தெரியும், சரவணா!' என்ற வார்த்தைகள் இந்த ஒரு வாழ்நாளுக்கு போதும், கேப்டன்!"
0 மறுமொழிகள்:
Post a Comment